புது டெல்லி: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. சபாநாயகர் இதை ஏற்க மறுத்ததால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
அதைத் தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக உறுப்பினர்கள் மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேச அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஆனால் எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவர் இந்த விஷயத்தில் தனது கருத்தைத் தெரிவிக்க முயன்றால், அனுமதி மறுக்கப்படுகிறது. மக்களவையில் பேச எனக்கு உரிமை உண்டு. ஆனால், எனக்கு ஒருபோதும் பேச அனுமதி வழங்கப்படுவதில்லை. எனக்குப் பேச அனுமதி வழங்கப்பட்டால், விவாதம் நடைபெறும்.
ஆளும் கட்சி ஏதாவது சொன்னால், எதிர்க்கட்சிக்கும் அது குறித்து பேச அனுமதி வழங்கப்பட வேண்டும். ஆனால் அனுமதி வழங்கப்படவில்லை. நாங்கள் இரண்டு வார்த்தைகள் பேச விரும்புகிறோம். ஆனால் அனுமதி மறுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.