கேரளா: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கேரளாவில் வயநாட்டில் கனமழை காரணமாக கடந்த 30ம் திகதி ஏற்பட்ட நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் மாயமாகி இருப்பதாகவும், அவரை பத்திரமாக மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிய வருகிறது.
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவரும், வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றவருமான ராகுல் காந்தி, தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் நிலச்சரிவு பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார். நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட சூரல்மாலா உள்ளிட்ட பகுதிக்கு சென்ற ராகுல் காந்தி, ரெயின் கோட் அணிந்தபடி அங்கு தற்காலிகமாக ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட பாலத்தில் நடந்து சென்று பாதிப்புகளை பார்வையிட்டார்.
மேலும், செயின்ட் ஜோசப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களை பார்வையிட்ட ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.