புவனேஸ்வர்: தேர்தல் ஆணையம் பாஜகவின் ஒரு பிரிவாக செயல்படுவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்த ஆண்டு இறுதியில் பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஒருபுறம், அங்குள்ள கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. மறுபுறம், தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை சிறப்பு திருத்தும் பணியைத் தொடங்கியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ‘இந்தியா’ கூட்டணியின் சார்பாக போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்த சூழலில், இன்று, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி ஒடிசாவின் தலைநகரான புவனேஸ்வரில் நடைபெற்ற ‘சம்விதான் பச்சாவ் சமவேஷ்’ என்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; ஒடிசா பாஜக அரசு ஒரே ஒரு காரியத்தை மட்டுமே செய்கிறது. அதாவது ஏழை மக்களிடமிருந்து ஒடிசாவின் செல்வத்தைத் திருடுவது.

முன்னதாக, பிஜு ஜனதா தள அரசு இதைச் செய்தது. இப்போது பாஜக அரசும் அதையே செய்கிறது. விவசாயிகள் மற்றும் மகளிர் குழுக்களை நான் சந்தித்தேன். அவர்கள் சொன்னதை நான் கேட்டேன். அவர்களின் வலியையும் துன்பத்தையும் கேட்டேன். பழங்குடிப் பகுதிகளில் உள்ள நீர், காடு மற்றும் நிலம் அவர்களுக்குச் சொந்தமானது. ஆனால் பழங்குடியினர் அவர்களின் நிலத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். PESA சட்டம் செயல்படுத்தப்படவில்லை.
பழங்குடியினருக்கு குத்தகைகள் வழங்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சி PESA சட்டம் மற்றும் பழங்குடி மசோதாவைக் கொண்டு வந்தது. இந்தச் சட்டங்களை நாங்கள் செயல்படுத்தி பழங்குடியினரின் நிலத்தை மீட்டெடுப்போம் என்று அவர் கூறினார். அவர் தொடர்ந்தார்; மகாராஷ்டிராவில் நடந்த தேர்தல் மோசடியைப் போலவே, பீகாரிலும் தேர்தலில் மோசடி செய்ய முயற்சி நடக்கிறது.
இதற்காக, தேர்தல் ஆணையம் ஒரு புதிய சதித்திட்டத்தை தீட்டியுள்ளது. தேர்தல் ஆணையம் அதன் வேலையைச் செய்யவில்லை. அது பாஜகவின் ஒரு பிரிவாகச் செயல்படுகிறது. மகாராஷ்டிராவில், மக்களவைத் தேர்தலுக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் இடையில், சுமார் 1 கோடி பேர் புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் யார், எங்கிருந்து வந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது.
வாக்காளர் பட்டியல் மற்றும் தொடர்புடைய வீடியோக்களை எங்களுக்கு வழங்குமாறு தேர்தல் ஆணையத்திடம் பலமுறை கேட்டுக்கொண்டுள்ளோம். ஆனால் தேர்தல் ஆணையம் அதை எங்களுக்கு வழங்க மறுக்கிறது. மகாராஷ்டிராவில் செய்ததையே பீகாரிலும் செய்ய முயற்சிக்கிறார்கள், ஆனால் நாங்கள் அதை ஒருபோதும் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று அவர் கூறினார்.