டெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பாஸ்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “இந்திய தேர்தல் ஆணையம் சமரச அமைப்பாக மாறியுள்ளது. மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது. அதற்கு தேர்தல் ஆணையம் உடந்தையாக உள்ளது” என்று குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து, பா.ஜ.க., மூத்த தலைவர் சம்பித் பத்ரா, டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- கேரளாவில், வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில், ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா வதேரா வெற்றி பெற்றுள்ளார். இதற்காக தேர்தல் ஆணையத்துடன் ராகுல் சமரசம் செய்தாரா? கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.க.,வுக்கு, 240 இடங்களே கிடைத்தன. அயோத்தி மக்களவைத் தொகுதியில் பாஜக தோல்வியடைந்தது. இதை மிகப்பெரிய வெற்றியாக காங்கிரஸ் கொண்டாடியது. அப்போது, தேர்தல் ஆணையம் குறித்து காங்கிரஸ் எதுவும் கூறவில்லை. தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படுகிறது.

இந்தியாவின் ஜனநாயகம் மலர்கிறது. மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக ராகுல் காந்தி ஏற்கனவே குற்றம் சாட்டினார். இதற்கு தேர்தல் ஆணையம் தகுந்த விளக்கத்தை அளித்துள்ளது. தற்போது அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நேரத்தில் ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து இந்தியாவை அவதூறாகப் பேசுகிறார். இது அவருக்கு பழக்கமாகிவிட்டது. ராகுல் காந்தி ஒரு துரோகி, அவர் ஆழ்ந்த விரக்தியில் இருக்கிறார். அதனால்தான் இந்தியாவை தொடர்ந்து அவதூறு செய்து வருகிறார்.
ஜாமீனில் வெளியில் வந்திருக்கிறார் என்பதை மறந்து விடக்கூடாது. 2018-ம் ஆண்டில், ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ரூ. 50,000 ஜாமினில் விடுதலையாகினார். இதை மிகப்பெரிய வெற்றியாக காங்கிரஸ் கொண்டாடியது. பா.ஜ.க.,வுக்கு இது ஊழல் கொண்டாட்டம். நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா மற்றும் ராகுல் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை முழு நாடும் அறியும். இவ்வாறு சம்பித் பத்ரா கூறினார்.
பாஜக மூத்த தலைவர் ஷெசாத் பூனாவாலா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் எந்த அறிக்கையும் வெளியிடாது. தோற்றால் தேர்தல் ஆணையத்தின் மீது அக்கட்சி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கும். அதேபோல், எந்த வழக்கில் வெற்றி பெற்றாலும், காங்கிரஸ் எந்த அறிக்கையும் வெளியிடாது. வழக்கில் தோற்றால், நீதிமன்றத்தையே அக்கட்சியினர் குற்றம் சாட்டுவார்கள். இது காங்கிரசின் வழக்கம். மக்களவைத் தலைவர் ராகுல் காந்தி வெளிநாடுகளுக்குச் சென்று இந்தியாவை அவதூறாகப் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். ஷெசாத் பூனாவாலா இதனைத் தெரிவித்துள்ளார்.