லக்னோ: கும்பமேளாவில் ராகுலும், பிரியங்காவும் புனித நீராடப் போகிறார்கள் என்றும், நேரு குடும்பத்துக்கு கும்பமேளா ஒன்றும் புதிதல்ல என்றும் பாஜகவுக்கு மாநில காங்கிரஸ் தலைவர் பதிலடி கொடுத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் நேற்று வரை 50 கோடிக்கும் அதிகமான மக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர் என்று உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.
உலகில் இதுவரை நடைபெற்ற எந்த மத, கலாச்சார அல்லது சமூக நிகழ்விலும் பங்கேற்ற மக்கள் தொகையை விட இது அதிகம். நடப்பு கும்பமேளாவில் சுமார் 45 கோடி பேர் பங்கேற்பார்கள் என்று மாநில அரசு கணித்திருந்தாலும், மகா கும்பமேளாவுக்கு இன்னும் பத்து நாட்களுக்கு மேல் உள்ள நிலையில் எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டியுள்ளது. கும்பமேளாவில் அரசியல் பிரமுகர்கள் மட்டுமின்றி தொழிலதிபர்கள், நடிகர், நடிகைகளும் புனித நீராடுகின்றனர்.
இதேபோல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கும்பமேளாவிற்கு வருகை தருகின்றனர். இந்நிலையில், உத்தரப்பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் அளித்த பேட்டியில், ‘காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அடுத்த வாரம் நடைபெறும் மகா கும்பமேளாவில் புனித நீராடுகிறார். அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.
கும்பமேளா மற்றும் பிரயாக்ராஜ் (அலகாபாத்) நேரு குடும்பத்திற்கு புதிதல்ல. அது அவர்களின் பூர்வீக இடம். அவர்களின் பூர்வீக வீடுகள் இங்கு அமைந்துள்ளன. ஆனந்த் பவன் மற்றும் ஸ்வராஜ் பவன் இன்னும் உள்ளன. திரிவேணி சங்கமும் அவர்களுக்குப் புதிதல்ல. ராகுலுடன் அவரது சகோதரியும் வயநாடு எம்பியுமான பிரியங்கா காந்தியும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுகிறார். மகா கும்பமேளாவை (பாஜக) நடத்துகிறோம் என்று கூறி அரசியல் ஆதாயம் தேடுபவர்கள், நேரு குடும்பத்திற்கு கும்பமேளா ஒன்றும் புதிதல்ல,’ என்றார்.