திருவனந்தபுரம்: ரயில்வே நிர்வாகம் லோகோ பைலட்கள் பணியில் இளநீர், இருமல் டானிக் போன்ற பொருட்கள் சாப்பிடக் கூடாது என்று விதித்த உத்தரவை தற்போது திரும்பப்பெற்றுள்ளது.
ரயில் இன்ஜின் டிரைவர்கள் பணிக்கு வரும்போது, அவர்கள் மது அருந்தியுள்ளனரா என்பது சோதிக்க ‘பிரீத் அனலைசர்’ எனப்படும், சுவாச பரிசோதனை கருவி வழியாக வழக்கம். இந்த சோதனைகள் கேரளாவில், திருவனந்தபுரம் ரயில்வே மண்டலத்தில் சமீபத்தில் செய்யப்பட்டன, இதில் ரயில் டிரைவர்கள் மது அருந்தியதாக முடிவுகள் வந்தன. ஆனால், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ரத்த பரிசோதனையில், ரத்தத்தில் ஆல்கஹால் இல்லை என முடிவு வந்தது.
இதற்கான விளக்கமாக, சிலர் ஹோமியோ மருந்துகள் உட்கொள்வதால் பிரீத் அனலைசர் கருவியில் மது இருப்பதாக தோன்றும் என்றும், மற்றவர்கள் பழங்கள் மற்றும் குளிர்பானங்கள் போன்றவற்றை சாப்பிட்டதாகவும் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வின் பின்னணியில், திருவனந்தபுரம் ரயில்வே மண்டல அதிகாரிகள் அதிரடி உத்தரவை வெளியிட்டனர். அதன் படி, இன்ஜின் டிரைவர்கள் இனி பணிக்கு வரும்போது, இளநீர், குளிர்பானங்கள், பழங்கள், வாய் புத்துணர்ச்சி திரவம், ஹோமியோபதி மருந்துகள் மற்றும் இருமல் மருந்துகள் ஆகியவற்றை உட்கொள்ள தடை விதிக்கப்பட்டது.
மேலும், இவற்றை உட்கொண்டால், முன்கூட்டியே எழுத்துப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்றும், ஆல்கஹால் கலந்த மருந்துகள் உட்கொள்பவர்கள், ரயில்வே மருத்துவ அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்துக், இன்ஜின் டிரைவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர், மேலும் இது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது எனக் குற்றம்சாட்டினர்.
இதன் பின்னணியில், ரயில்வே நிர்வாகம், லோகோ பைலட்கள் பணியில் இளநீர் மற்றும் இருமல் டானிக் போன்ற பொருட்கள் சாப்பிடக்கூடாது என்ற உத்தரவை திரும்பப் பெற்றது.