மும்பை நகரத்தில் எழுந்த மராத்தி மொழி சார்ந்த அரசியல் விவகாரம் மீதான தாக்கங்கள் தொடர்ந்து பேசப்பட்டு வரும் நிலையில், நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே முக்கியமான அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளார். மராத்தி மொழி குறித்த விவாதங்களில் கட்சியினரால் எந்தவிதமான தனிப்பட்ட கருத்துகளும் பொதுவெளியில் தெரிவிக்கப்படக் கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இது எதிர்பாராத நிலையில் வந்ததால் கட்சிக்குள் உள்ள முக்கிய நிர்வாகிகள் வருத்தம் மற்றும் ஆச்சரியத்துடன் இந்த நடவடிக்கையை கவனித்துள்ளனர்.

மும்மொழிக்கொள்கை அமல்படுத்தப்படும் என மஹாராஷ்டிரா அரசு அறிவித்தது மற்றும் இதில் இந்தி மூன்றாவது மொழியாக இருப்பது பற்றி தெரிவித்தது. இதற்கு ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே இருவரும் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். அரசின் இந்த முடிவுக்கு எதிராக நடந்த போராட்டத்தால் அரசு தனது அறிவிப்பை வாபஸ் பெற்றது. இந்த வெற்றியை முன்னிட்டு, இருவரும் 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே மேடையில் தோன்றி அதிரடியாக அரசியலுக்கு புதிய களம் உருவாக்கினர்.
அதனைத் தொடர்ந்து கட்சி உறுப்பினர்கள் ஊடகங்களில் கருத்து தெரிவிப்பது அல்லது சமூக வலைதளங்களில் வீடியோ பதிவுகளை வெளியிடுவது குறித்து கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பும் செய்தித் தொடர்பாளர்களின் அனுமதியின்றி வெளியிடக்கூடாது என்றும், தனிப்பட்ட வீடியோக்கள், பதிவு போன்றவை வெளியாவதை தவிர்க்க வேண்டும் என்றும் ராஜ் தாக்கரே அறிவுறுத்தியுள்ளார்.
இந்த திடீர் நடவடிக்கையின் பின்னணியில் சில முக்கிய அரசியல் காரணங்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. மராட்டா மண்ணின் அடையாளம், மொழி, மரபு ஆகியவற்றை பாதுகாப்பதில் உணர்வுப் பூர்வமான சூழ்நிலை நிலவுகிறது. அதனால்தான் தலைவராக ராஜ் தாக்கரே, தன் கட்சியினரிடையே கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த முயற்சி எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.