ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில விவசாயம், தோட்டக்கலை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரோடி லால் மீனா, தான் பிரச்சாரம் செய்த 7ல் 4 தொகுதிகளில் பாஜக தோல்வியடைந்ததால், விவசாயம், தோட்டக்கலை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், ஏழு லோக்சபா தொகுதிகளில் தோல்வியடைந்தால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக, கிரோடி லால் மீனா கூறியிருந்தார்.
அவரது சொந்த தொகுதியான தௌசா உட்பட 4 தொகுதிகளில் பாஜக தோல்வியடைந்தது. இதனால் அவர் அதிருப்தி அடைந்தார். தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து அவர் அமைச்சர் அலுவலகத்திற்கு வரவில்லை.
இந்த தோல்விக்கு பொறுப்பேற்று கிரோடி லால் மீனா (வயது 72) இன்று (ஜூலை 04) தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா இன்னும் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.