புது டெல்லி: சீன பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் டான் ஜூனுடனான பேச்சுவார்த்தையின் போது, எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மீண்டும் வலியுறுத்தினார். சீனாவின் கிங்டாவோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டின் ஒரு பகுதியாக, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சீன பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் டான் ஜூனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளிலிருந்து இந்தியாவைப் பாதுகாக்க ஆபரேஷன் சிந்தூர் தொடரும் என்று ராஜ்நாத் சிங் கூறினார். இந்தியாவின் அசைக்க முடியாத உறுதியை அதன் அண்டை நாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். சீனாவுடனான உறவுகளில் புதிய சிக்கல்களைத் தவிர்க்கவும் அவர் கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக, ராஜ்நாத் சிங் ஒரு ட்வீட்டில், “கிங்டாவோவில் நடந்த SCO பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தின் போது சீன பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் டான் ஜுனுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். இருதரப்பு உறவுகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆக்கபூர்வமான மற்றும் எதிர்காலத்திற்கான கருத்துப் பரிமாற்றம் நடந்தது. கிட்டத்தட்ட ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்கியுள்ளதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த நேர்மறையான உத்வேகத்தைப் பேணுவதும், இருதரப்பு உறவில் புதிய சிக்கல்களைச் சேர்ப்பதைத் தவிர்ப்பதும் இரு தரப்பினரின் கடமையாகும்” என்று கூறினார். 2020-ம் ஆண்டில், கிழக்கு லடாக் இராணுவ மோதல் மற்றும் கொடிய கல்வான் பள்ளத்தாக்கு மோதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.