உத்தரபிரதேசத்தின் மெயின்புரியில் 2008ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் ஏற்பட்ட அடிதடியால் கொலை முயற்சி வழக்கில் நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் உண்மையான குற்றவாளி ராம்வீருக்கு பதிலாக, அவரது சகோதரரான ராஜ்வீர் சிங் யாதவின் பெயர் தவறுதலாக புகார் பதிவில் சேர்க்கப்பட்டது. இந்த தவறால், ராஜ்வீர் சிங் 22 நாட்கள் சிறைவாசம் அனுபவித்ததோடு, 17 ஆண்டுகள் நீடித்த நீதி மன்றப் போராட்டத்தில் சிக்கிக்கொண்டார்.

ராஜ்வீர் சிங், தன்னை தவறாக சேர்த்துள்ளதாக கூறி சிறையில் இருந்து உடனே மனு தாக்கல் செய்தார். விசாரணையில் அவர் விடுவிக்கப்பட்டாலும், வழக்கு நீதிமன்றத்தில் இருந்து தள்ளப்படவில்லை. இதனால் அவரது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டது. மன அழுத்தம் காரணமாக அவர் வாழ்க்கையில் பல இன்னல்களை எதிர்கொண்டார்.
இந்நிலையில், 17 ஆண்டுகளுக்குப் பின் மெயின்புரி நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கியுள்ளது. ராஜ்வீர் சிங் நிரபராதி என அறிவிக்கப்பட்டதுடன், அவரை தவறாக கைது செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலீசார் சில வாரங்களிலேயே தவறை ஒப்புக்கொண்டிருந்தாலும், வழக்கு நீடித்த காலம் ராஜ்வீரின் குடும்ப வாழ்க்கையை அழித்துவிட்டது.
தற்போது 55 வயதான ராஜ்வீர், “என் மகள்களுக்கு திருமணம் செய்து வைத்தேன். ஆனால் என் மகன் படிப்பை நிறுத்த வேண்டிய நிலை வந்தது. இழந்த அனைத்திற்கும் பொறுப்பேற்க அதிகாரிகள் தயாராக வேண்டும். என்னை பிழையாக கைது செய்ததற்கான இழப்பீடு எனக்கு வழங்கப்பட வேண்டும்” என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.