சண்டிகர்: தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீம், ஹரியானா தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டாலும், அக்கட்சிக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என முடிவுகள் வெளியாகியுள்ளன. ஹரியானாவில் உள்ள தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவராக குர்மீத் ராம் ரஹீம் சிங் உள்ளார்.
2017 ஆம் ஆண்டில், கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, ஹரியானாவின் ரோடக் மாவட்டத்தில் உள்ள சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 4 ஆண்டுகளில் 10 முறைக்கு மேல் பரோலில் வெளிவந்தார்.
சட்டசபை தேர்தலை காரணம் காட்டி குர்மீத் ராம் ரஹீம் சிங் பரோல் கோரியிருந்தார். சிறையில் உள்ள தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீமுக்கு அக்டோபர் 1ம் தேதி 20 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்த ராம் ரஹீம், தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்குமாறு தனது ஆதரவாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். தேராவில் 1.25 கோடி உறுப்பினர்கள் இருப்பதாகவும், ஹரியானாவின் 28 சட்டமன்றத் தொகுதிகளில் அவர்கள் பெரும்பான்மையாக இருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியது.
ஆனால் தேர்தல் முடிவுகளின்படி அந்த 28 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 15 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது; பாஜகவுக்கு 10 இடங்களே கிடைத்தன. இந்திய தேசிய லோக் தளம் கட்சி 2 தொகுதிகளிலும், சுயேச்சை வேட்பாளர் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றனர். இதன் மூலம் ராம் ரஹீமின் செல்வாக்கு தெரியவந்துள்ளதாக அரசியல் கட்சியினர் கூறுகின்றனர்.