சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை வந்த இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், ரிசர்வ் வங்கி இல்லத்தில் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் குழுவினர் அவருக்கு பரிசோதனை செய்து தேவையான சிகிச்சை அளித்தனர்.
இதுகுறித்து, அப்பல்லோ மருத்துவமனை மருத்துவப் பணிகள் இயக்குநர் ஆர்.கே. வெங்கடாசலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நேற்று காலை 10 மணியளவில் , “ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நெஞ்செரிச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை மருத்துவக் குழுவினர் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் நன்றாக இருக்கிறார். விரைவில் வீடு திரும்புவார்,” என்றார்.
இதற்கிடையில், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, சக்திகாந்த தாஸ் நேற்று மதியம் வீடு திரும்பினார். திமுக முதன்மை செயலாளரும், தமிழக அரசின் நகராட்சி நிர்வாக அமைச்சருமான கே.என். நேரு சில நாட்களாக லேசான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம், கடும் காய்ச்சல் மற்றும் சோர்வு காரணமாக, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு பரிசோதனை செய்து தேவையான சிகிச்சை அளித்தனர். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அமைச்சர் கே.என். நேரு மருத்துவமனையில் இருந்து நேற்று நள்ளிரவு வீடு திரும்பினார்.