புதுடெல்லி: 1990 பேட்ச் ராஜஸ்தான் கேடர் ஐஏஎஸ் அதிகாரியான சஞ்சய் மல்ஹோத்ராவுக்கு 56 வயது. ரிசர்வ் வங்கியின் 26-வது ஆளுநராக நாளை அவர் பதவியேற்கிறார். கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் கணினி அறிவியலில் பொறியியல் பட்டதாரியான இவர், அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கையில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.
33 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுப் பணியில் இருந்த இவர், மின்சாரம், நிதி மற்றும் வரிவிதிப்பு, தகவல் தொழில்நுட்பம், சுரங்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார். தற்போது நிதியமைச்சகத்தின் வருவாய்த்துறை செயலாளராக உள்ளார். இன்றுடன் ஓய்வு பெறும் சக்திகாந்த தாஸ் (67), தமிழ்நாடு கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.
சக்திகாந்த தாஸ் டிசம்பர் 12, 2018 அன்று ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டார். 3 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இன்றுடன் நீட்டிப்பு முடிவடைகிறது.