தனியார் வங்கிகளில் அதிக அளவில் ஊழியர்கள் ராஜினாமா செய்வதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், தனியார் துறை வங்கிகள் மற்றும் சிறு நிதி வங்கிகளில் (எஸ்எப்ஐ) பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு பிரச்னைகளால் வேலையை விட்டு விலகுவதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வங்கி செயல்பாடுகளின் ஆபத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
கடந்த 2023-24 நிதியாண்டில், பொதுத்துறை வங்கிகளை விட தனியார் துறை வங்கிகளில் ராஜினாமா விகிதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. ராஜினாமா விகிதம் சராசரியாக 25 சதவீதம். இது வங்கிகளுக்கு செயல்பாட்டு அபாயங்களை ஏற்படுத்துகிறது.

குறிப்பாக, இது நிறுவன அறிவை இழப்பதோடு வங்கிகளுக்கான ஆட்சேர்ப்புச் செலவுகளையும் அதிகரிக்கிறது. இது வாடிக்கையாளர் சேவையிலும் இடையூறு ஏற்படுத்துகிறது. எனவே, இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தனியார் மற்றும் சிறு நிதி வங்கிகள் ஊழியர்களின் ஆட்சேபனையை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது மனித வள செயல்முறை மட்டுமல்ல, நிறுவனத்தின் வளர்ச்சி இலக்குகளுக்கும் அவசியமானது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.