சண்டிகர்: ஹரியானாவில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது குறித்து காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சரும், ஹரியானா மாநிலம் சிர்சா தொகுதியின் எம்.பி.யுமான குமாரி செல்ஜா கூறியுள்ளார்.
காலை வரை அனைத்து கட்சி தொண்டர்களும் உற்சாகத்தில் இருந்தனர். ஆனால், நாங்கள் படுதோல்வி அடைந்துள்ளோம். இந்த தோல்விக்கு யார் பொறுப்பு? ஹரியானாவில் காங்கிரசை ஆட்சிக்கு கொண்டுவர கடந்த 10 ஆண்டுகளாக கட்சியினர் உழைத்து வருகின்றனர்.
ஆனால் இம்முறையும் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஹரியானாவில் கட்சி நிலைமையை காங்கிரஸ் தலைமை ஆய்வு செய்ய வேண்டும். இந்த தோல்விக்கு யார் காரணம் என்பதை கண்டறிய வேண்டும் என்றார்.
காங்கிரஸ் தலைவரும், ஹரியானா முன்னாள் முதல்வருமான பூபிந்தர் சிங் ஹூடாவுக்கும், குமாரி செல்ஜாவுக்கும் இடையே சமீபத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் தலைமை பூபிந்தர் சிங் ஹூடாவுக்கு முன்னுரிமை அளித்தது. இதனால் குமாரி செல்ஜா தேர்தல் பிரசாரத்தில் இருந்து ஒதுங்கி இருந்தார். இந்நிலையில், தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததற்கு பூபிந்தர் ஹூடா தான் காரணம் என செல்ஜா மறைமுகமாக கருத்து தெரிவித்தார்.