டெல்லி: தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பம் நிலவி வருகிறது, ஆனால் இன்று காலை திடீரென பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. பலத்த காற்று காரணமாக, பல்வேறு பகுதிகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. துவாரகா பகுதியில் மரங்கள் விழுந்ததில் 4 பேர் உயிரிழந்ததாகவும், ஒருவர் படுகாயமடைந்ததாகவும் டெல்லி போலீசார் தெரிவித்தனர்.
டெல்லி, நொய்டா, காஜியாபாத் மற்றும் துவாரகாவின் ஆர்.கே. நகர் உள்ளிட்ட தலைநகர் பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் ஆறுகள் போல தண்ணீர் ஓடியது. இதன் காரணமாக, வாகனங்கள் ஹெட்லைட்களை எரியவிட்டபடி ஊர்ந்து செல்ல வேண்டியிருந்தது. அதிகாலையில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் கனமழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதிகாலையில் பெய்த கனமழை காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின.

டெல்லியில் மட்டுமல்லாமல் உத்தரபிரதேசம், ஹரியானா போன்ற அண்டை மாநிலங்களிலும் கனமழை பெய்தது. இந்த சூழ்நிலையில், தலைநகர் டெல்லிக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், அடுத்த 3 நாட்களுக்கு பலத்த காற்றுடன் கூடிய கனமழை தொடரும் என்று எச்சரித்துள்ளது.
பொதுமக்கள் மரங்களுக்கு அருகில் நிற்பதைத் தவிர்க்கவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.