சிம்லா மற்றும் சுற்றுவட்டாரங்களில் கடந்த சில நாட்களாக பருவமழை மிக தீவிரமாக பெய்து வருகிறது. ஜூன் 20ஆம் தேதி தொடங்கிய இந்த பருவமழை, ஹிமாச்சல பிரதேசத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு, மேகவெடிப்பு போன்ற நிகழ்வுகளை உருவாக்கியுள்ளது. மக்கள் இயல்பான வாழ்க்கையை மேற்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது ஏற்பட்ட சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஹிமாச்சலத்தின் முக்கியமான மூன்று மாவட்டங்களுக்கு இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது.

மண்டி, கங்க்ரா மற்றும் சிர்மார் ஆகிய மாவட்டங்களில் தொடரும் கனமழையால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக மண்டி மாவட்டத்தில் மட்டும் 176 சாலைகள் உட்பட 260 சாலைகள் சேதமடைந்து வாகன போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அரசின் முதற்கணக்கீட்டின்படி, முழு மாநிலத்திலும் ரூ.540 கோடிக்கு மேல் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இம்மழைக்காலத்தில் மட்டும் 72 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேகவெடிப்புகளால் உருவாகும் திடீர் வெள்ளப்பெருக்குகள், இடியுடன் கூடிய மழை, மற்றும் நிலச்சரிவுகள் மக்கள் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளன. மழை பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மாநில மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முக்கியமான பகுதிகளில் தேசிய பேரிடர் தற்காப்பு குழுக்கள் மற்றும் மாநில அவசரப் பாதுகாப்புப் படைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. மழை தொடரும் நிலையில், மாநிலத்தில் வசிக்கும் மக்களும், சுற்றுலாப் பயணிகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.