கேரளாவில் கடுமையான வெயில் காரணமாக பொதுமக்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதற்கிடையில், புற ஊதா கதிர்வீச்சு (யூ.வி.) அதிகரித்து காணப்படுவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, பத்தினம்திட்டா மற்றும் இடுக்கி ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் கோடை தொடங்குவதற்கு முன்பே வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. நடந்து செல்லும் மக்கள் குடை இல்லாமல் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், வயதானோர் வெயிலின் தாக்கத்தால் மிகவும் சிரமப்படுகின்றனர். இதேபோல், கேரளாவில் வெப்பநிலை உயரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் ஆறு மாவட்டங்களில் யூ.வி. கதிர்வீச்சு அளவு கடுமையாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பத்தினம்திட்டாவில் யூ.வி. குறியீட்டு எண் 11 ஆகவும், இடுக்கியில் 12 ஆகவும் பதிவாகியுள்ளது. இது மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கதிர்வீச்சு மனிதர்களின் உடலுக்கு தீங்கான விளைவுகளை ஏற்படுத்தும். கண் பிரச்சினைகள், தோல் பாதிப்பு, உடல் நீர்சத்து குறைவு போன்ற பல பாதிப்புகளை இது ஏற்படுத்தும் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
யூ.வி. கதிர்வீச்சின் தாக்கம் அதிகம் இருக்கும் பகுதிகளில் அதற்கேற்ப விழிப்புணர்வு அலர்ட்களும் விடுக்கப்பட்டுள்ளன. கொல்லம், கோட்டயம், பாலக்காடு, மலப்புறம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், அலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம். நீர் உறிஞ்சும் பருத்தி துணிகளை அணிந்து, முகக்கவசம், குடை, தொப்பி போன்றவற்றை பயன்படுத்தி பாதுகாக்க வேண்டும். சீரான இடைவெளியில் நீர் பருகுவது நல்லது. அதிக வெப்பம் ஏற்படுத்தும் மது, காபி, டீ போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மேலும், இயற்கை தண்ணீர் அளவை அதிகரிக்க பழங்கள், காய்கறிகள் அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே செல்லும் போது காலணி அணிந்து செல்லும் வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.