
2020 டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தமுள்ள 70 இடங்களில் 62 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பாஜக 8 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இந்நிலையில் டெல்லி சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இதற்கான முதல் வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி கடந்த மாதம் 21-ம் தேதி வெளியிட்டது.
அதில் 11 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசியல் விவகாரக் குழு இந்தப் பட்டியலை இறுதி செய்துள்ளது. இந்நிலையில் இன்று இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட 20 வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

பட்பர்கஞ்ச் தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் மணீஷ் சிசோடியா, வரும் தேர்தலில் ஜங்புரா தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த கல்வியாளர் அவாத் ஓஜா பட்பர்கஞ்ச் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
இவர் சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்கு பயிற்சி அளித்து வந்தார். பட்பர்கஞ்ச் தொகுதியை அவரிடம் ஒப்படைப்பதில் மகிழ்ச்சி அடைவதாக மணீஷ் சிசோடியா கூறினார். மீதமுள்ள 39 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஆம் ஆத்மி கட்சி விரைவில் அறிவிக்கும்.