பஞ்சாபில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பல மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவி வழங்கும் நோக்கில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 10 அம்ச நிவாரணத் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் 10,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உணவு, தங்குமிடம், சுகாதாரம் மற்றும் கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட உள்ளன.

இதுகுறித்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இயக்குனர் ஆனந்த் அம்பானி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பஞ்சாப் மக்கள் எதிர்கொள்ளும் துயரத்தில் அவர்களுடன் நின்று உதவுவது எங்கள் பொறுப்பு. மக்களின் அடிப்படை தேவைகளையும், விலங்குகளுக்கான பராமரிப்பையும் உறுதி செய்யும் விதமாக இந்த 10 அம்சத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தை ரிலையன்ஸ் அறக்கட்டளை, ரிலையன்ஸ் ரீடெய்ல், ஜியோ மற்றும் வந்தாரா குழு இணைந்து செயல்படுத்துகின்றன. 10,000 குடும்பங்களுக்கு ரேஷன் பொருட்கள், அவசர தங்குமிட உபகரணங்கள், சுகாதாரப் பெட்டிகள் வழங்கப்படுகின்றன. தனியாக வசிக்கும் முதியவர்கள் மற்றும் பெண்கள் கொண்ட 1,000 வீடுகளுக்கு ரூ.5,000 மதிப்புள்ள வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன. மேலும் நீர் சுத்திகரிப்பு கருவிகள், சுகாதார முகாம்கள், கால்நடை முகாம்கள், தடுப்பூசி, மருந்துகள் ஆகியனவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஜியோ குழு வெள்ளப் பகுதிகளில் நெட்வொர்க் இணைப்பை மீட்டெடுக்க தேசிய பேரிடர் மீட்புப் படையுடன் இணைந்து பணியாற்றுகிறது. அதேசமயம், வந்தாரா குழு விலங்கு மீட்பு மற்றும் பராமரிப்பில் ஈடுபட்டுள்ளது. உடனடி நிவாரணத்துடன், நீண்டகால மறுவாழ்வையும் மையப்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாக ரிலையன்ஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.