இமாச்சல பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக குலு பகுதியில் சிக்கிய 5,000 சுற்றுலா பயணிகளை போலீசார் மீட்டனர். இதுகுறித்து குலு காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இமாச்சலப் பிரதேச மாநிலம் குலுவில் கடந்த வெள்ளிக்கிழமை கடும் பனிப்பொழிவு காரணமாக சோலாங் நல்லா என்ற இடத்தில் 1,000-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் பனியில் சிக்கித் தவித்தன.
இந்த வாகனங்களில் இருந்த 5,000 சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களது வாகனங்களும் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, இமாச்சல பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு மற்றும் குளிர் அலையின் தாக்கம் தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையாக இருக்கவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் ஐஎம்டி அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, பனி மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதால் சாலைகள் மூடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. லாஹவுல்-ஸ்பிடி, சம்பா, காங்க்ரா, குலு, சிம்லா, கின்னவுர் உள்ளிட்ட இமாச்சலத்தின் 7 மாவட்டங்களில் கனமழை மற்றும் பனிப்பொழிவு காணப்படுகிறது.