சென்னை: திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தினசரி பல சேவைகள் அதிகாலை முதல் நள்ளிரவு வரை நடைபெறுகின்றன. இதில் மே மாதத்தில் நடைபெறும் முக்கிய சேவைகளுக்கான முன்பதிவு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஸ்ரீவாரி ஆர்ஜித சேவை எலக்ட்ரானிக் குலுக்கலுக்கு நாளை காலை 10:00 மணி வரை முன்பதிவு செய்ய முடியும்.
ஸ்ரீவாரி ஆர்ஜித சேவைகள் என்ற கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கு முன்பதிவு வரும் 21ம் தேதி காலை 10:00 மணிக்கு துவங்குகிறது. ஆன்லைன் வாயிலாக தரிசிக்கும் கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கான முன்பதிவு 21ம் தேதி மாலை 3:00 மணிக்கு தொடங்கும்.
அங்கப்பிரதட்சணம் சேவைக்கான முன்பதிவு 22ம் தேதி காலை 10:00 மணிக்கும், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான தரிசன முன்பதிவு மாலை 3:00 மணிக்கு தொடங்கும். மே மாத சிறப்பு தரிசனத்திற்கான முன்பதிவு 24ம் தேதி காலை 10:00 மணிக்கு துவங்கும். அதே நாளில் தங்கும் விடுதிகளுக்கான முன்பதிவும் தொடங்கும்.