திருவனந்தபுரம்: சபரிமலையில் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு அரசு துறையினருக்கு பாராட்டு விழா நேற்று திருவனந்தபுரத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கேரள தேவசம்போர்டு அமைச்சர் வாசவன் நிருபர்களிடம் கூறியதாவது:- சபரிமலையில் இந்த ஆண்டு மண்டல, மகரவிளக்கு சீசன் பிரச்னையின்றி நடந்ததால், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்து திரும்பினர். இந்த மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனில் மொத்தம் 53 லட்சத்து 9 ஆயிரத்து 906 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
உடனடி முன்பதிவு மூலம் தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 3 ஆயிரத்து 305. கடந்த ஆண்டு 46 லட்சத்து 77 ஆயிரத்து 598 பேர் தரிசனம் செய்தனர். அந்த ஆண்டில் உடனடி முன்பதிவு மூலம் தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 43 ஆயிரத்து 180 ஆகும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 6 லட்சத்து 32 ஆயிரத்து 308 பேர் கூடுதலாக வந்துள்ளனர். இந்த மண்டலம், மகரவிளக்கு காலத்தில் கிடைத்த மொத்த வருமானம் ரூ.440 கோடி.
கடந்த ஆண்டு வருமானம் ரூ.360 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.80 கோடிக்கு மேல் வருவாய் கிடைத்துள்ளது. சபரிமலையில் ரோப்கார் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். ரோப் காரின் முக்கிய நோக்கம் பம்பாயில் இருந்து சன்னதிக்கு சரக்குகளை ஏற்றிச் செல்வதுதான் என்றாலும், வயதானவர்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர் அதில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
இதன் தூரம் 2.7 கி.மீ. இப்பணியை ஒன்றரை ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரோப் கார் செயல்பாட்டுக்கு வந்ததும், டிராக்டர்களில் சரக்குகளை கொண்டு செல்வதும், டோலியில் ஆட்களை ஏற்றுவதும் நிறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.