ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று டாடா குழுமம் அறிவித்துள்ளது. அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் AI171 பறக்க துவங்கிய சில நிமிடங்களுக்குள் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 241 பயணிகள், 10 விமான ஊழியர்கள் மற்றும் இரண்டு விமானிகள் உள்பட பெரும்பாலானோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் அடக்கம்.

விபத்து எப்படி ஏற்பட்டது என்ற விபரங்கள் அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை. கருப்பு பெட்டியை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விமானம் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் கல்லூரி மாணவர் விடுதியில் மோதியதால் அங்கு பலரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
அந்த விமானத்தில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பியுள்ளார். அவசர வெளியேற்றுப் வழியில் 40 வயதான ரமேஷ் விஸ்வாஸ் குமார் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். அவர் மார்பு, கண்கள் மற்றும் கால் போன்ற பகுதிகளில் கடுமையாக காயமடைந்துள்ளார். இவர் தட்டுத் தடுமாறி நடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
டாடா குழும தலைவர் நடராஜன் சந்திரசேகரன் தெரிவித்ததன்படி, உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பாதிக்கப்பட்டோருக்கு முழு மருத்துவச் செலவும் டாடா குழுமம் ஏற்கும் என்று தெரிவித்தார். இந்த விபத்து மிகுந்த சோகத்தையும் கவலையையும் உண்டாக்கியுள்ளது.