பெங்களூரில் சைபர் குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கர்நாடக முன்னாள் முதல்வர் சதானந்த கவுடாவும் மோசடிக்கு இரையாகியுள்ளார்.
அவரது மூன்று வங்கிக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு, தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 3 லட்சம் ரூபாய் சைபர் குற்றவாளிகளால் பறிக்கப்பட்டுள்ளது. ஜி பே, போன் பே போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனை செயலிகள் வழியே இந்தத் தொகை திருடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து அவர், “என் மூன்று வங்கிக் கணக்குகளில் (HDFC, SBI, Axis) இருந்து பணம் மோசடி செய்யப்பட்டது. இதுகுறித்து சைபர் போலீசில் புகார் செய்ய உள்ளேன்” என்று கூறியுள்ளார்.
சமீப காலமாக பொதுமக்கள் மட்டுமின்றி நடிகர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என பலரும் சைபர் மோசடியில் சிக்கி வருவது கவலைக்குரிய நிலையாக உள்ளது. கடந்த வாரமே கன்னட நடிகர் உபேந்திரா, அவரது மனைவி பிரியங்கா ஆகியோரிடமும் ஹேக்கர்கள் 55,000 ரூபாய் பறித்தனர்.
சைபர் குற்றவாளிகளை பிடிப்பது போலீசாருக்கு கடின சவாலாக மாறி வரும் நிலையில், முன்னாள் முதல்வரிடம் நடந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.