சென்னை: ஆர்.எஸ்.எஸ். (ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்க்) தனது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விரிவான கொண்டாட்டங்களைத் திட்டமிட்டுள்ளது. வரும் அக்டோபர் 2ம் தேதி விழா துவங்கி, ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
அதன்படி, அக்டோபர் 2 முதல் 12 வரை அனைத்து ஒன்றியங்களிலும் ஒன்றரை மணி நேர சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இதில், ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் முழு சீருடையுடன் பங்கேற்கின்றனர். விழாவின் முக்கிய அம்சமாக நவம்பர் 2 முதல் 23 வரை “வீட்டு தொடர்பு இயக்கம்” நடத்தப்படுகிறது. இதன் போது, தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று, நூற்றாண்டு காணும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பணிகள், நோக்கங்கள் குறித்து மக்களுக்கு எடுத்துரைப்பார்கள்.

இந்த இயக்கத்தில் பா.ஜ., உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் கலந்து கொள்வர். இதன் மூலம் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரித்து, விழா கொண்டாட்டத்தை சமூக அளவில் விரிவுபடுத்துவதே குறிக்கோளாகும்.
மேலும், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஒன்றிய அளவில் ஹிந்து எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து கருத்தரங்குகள், இளைஞர்களுக்கான நிகழ்ச்சிகள், சமுதாய நல்லிணக்க கூட்டங்கள் என ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன என ஆர்.எஸ்.எஸ். அறிவித்துள்ளது.