புதுடெல்லி: 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக 13,766 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1.56 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இத்தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, கடந்த 2015 மற்றும் 2020-ல் நடந்த இரண்டு சட்டசபை தேர்தல்களிலும் வெற்றி பெற்றது.
ஆம் ஆத்மி கட்சிக்கு முன், டில்லியில், 15 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. டெல்லியில் 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இல்லை. இந்நிலையில் டெல்லியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்புடன் பா.ஜ.க. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பலர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜகவுக்கு ஆதரவாக ஆர்எஸ்எஸ் அமைப்பு தனது பாணியில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. டெல்லியில் உள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பு 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

இதில், 30 மாவட்டங்கள் மற்றும் 173 நகரங்கள் உள்ளன. இவற்றில், 50,000 வரவேற்பு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே இதற்கான திட்டமிடலை ஆர்.எஸ்.எஸ். இந்த “வரவேற்பு கூட்டங்கள்” ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள அலுவலகங்கள், நிறுவனங்கள், வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற பகுதிகளில் சிறிய குழுக்களாக நடத்தப்பட்டுள்ளன. இதில், ஒவ்வொரு மண்டலத்திலும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 8 மண்டலங்களில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
டெல்லியைச் சேர்ந்த மூத்த ஆர்எஸ்எஸ் நிர்வாகி ஒருவர் கூறுகையில், “வழக்கமான வாக்களிப்பதன் அவசியம் மற்றும் தேசிய நலனை மனதில் கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம். தேச நலனுக்காக பாஜக பாடுபடுவதால் வாக்களிக்கச் சொன்னோம்,” என்றார். இந்தக் கூட்டங்களில், பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பது மட்டுமின்றி, சுற்றுச்சூழல் மாசு, குடும்ப விழுமியங்கள், ஊழல், சமூக நல்லிணக்கம், சுதேசி போன்ற பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
2014 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, ஒவ்வொரு தேர்தலின் போதும் பாஜகவுக்கு ஆர்.எஸ்.எஸ்-ன் பங்கு முக்கியத்துவம் பெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த ஹரியானா தேர்தலில் மொத்தமுள்ள 90 இடங்களில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்றது. மகாராஷ்டிராவில் பாஜக, சிவசேனா (ஷிண்டே) மற்றும் என்சிபி (அஜித் பவார்) கூட்டணி 288 இடங்களில் 237 இடங்களில் வெற்றி பெற்றது. இந்தத் தேர்தல்களில் ஆர்எஸ்எஸ்-ன் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.