புதுடில்லி: டில்லி அரசுப் பள்ளிகளில் விரைவில் ஆர்எஸ்எஸ் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பைப் பற்றிய பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மாநில கல்வி அமைச்சர் ஆஷிஸ் சூட் தெரிவித்துள்ளார்.
கடந்த 80 ஆண்டுகளில் நாட்டை கட்டமைப்பதில் ஆர்எஸ்எஸ் முக்கிய பங்கு வகித்துள்ளது. சமூக சேவையை முன்னெடுக்கும் இந்த அமைப்பை, புதிய கல்விக் கொள்கையின் கீழ் “ராஷ்டிரிய நீதி” என்ற தலைப்பில் பாடத்திட்டத்தில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களிடையே சமூக உணர்வு, பொறுப்பு உணர்வு வளர்த்தெடுக்கப்படும் என கூறப்படுகிறது.

இந்தப் பாடங்கள் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை சனிக்கிழமைகளில் கூடுதல் வகுப்புகளாக நடத்தப்படும். தற்போதைய பாட அட்டவணைகள் பாதிக்கப்படாத வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பாடப்புத்தகங்கள் மற்றும் ஆசிரியர் கையேடுகள் ஏற்கனவே தயாராகிவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டில்லியில் உள்ள சுமார் 1,100 அரசுப் பள்ளிகள் பெரும்பாலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை பின்பற்றுகின்றன. இப்போது அதனுடன் கூடுதலாக ஆர்எஸ்எஸ் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பு பற்றிய பாடங்களும் சேர்க்கப்படுவது, கல்வி துறையில் பெரிய மாற்றமாகக் கருதப்படுகிறது.