கேரளாவின் பிரபலமான சபரிமலை ஐயப்பன் கோயில் ஒவ்வொரு மாதமும் முதல் ஐந்து நாட்களுக்கு திறக்கப்படும் வழக்கப்படி, ஆவணி மாத பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தந்திரிகள் கண்டரரு ராஜீவரும், கண்டரரு பிரம்மதத்தனும் முன்னிலையில், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி தீபாராதனை செய்து, யோகநித்திரையில் இருந்த ஐயப்பனை எழுப்பினார்.

நடை திறக்கப்பட்ட உடனே, கற்பூர ஆழியில் தீபம் ஏற்றி, பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். முதல் நாளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படாமல், கோயில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. நாளை முதல் 21ஆம் தேதி வரை, அதிகாலை 5 மணி முதல் இரவு வரை, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்ளிட்ட அனைத்து வழிபாடுகளும் நடைபெற உள்ளது.
திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அறிவிப்பின்படி, பக்தர்கள் தரிசனத்திற்கும் தங்குவதற்கும் sabarimalaonline.org.in என்ற இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்யலாம். இருமுடி கொண்ட பக்தர்கள் 18 படிகள் ஏறிச் செல்லலாம்; விரதம் மட்டுமே இருந்து இருமுடி இல்லாமல் வரும் பக்தர்களுக்கு “சிவில் தரிசனம்” ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், காலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை மட்டுமே அந்த தரிசனம் அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
21ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும் நிலையில், ஒவ்வொரு நாளும் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடிய பின் நடை அடைக்கப்படும். பக்தர்கள் ஒழுங்காக தரிசனம் செய்ய தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.