மும்பை: மதமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சங்கூர் பாபா என்ற ஜலாலுதீனை அடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை இரு மாநிலங்களில் 14 இடங்களில் சோதனைகளை நடத்தி வருகின்றது. உத்தரபிரதேசம் மற்றும் மஹாராஷ்டிராவில் உள்ள சந்தேகத்திற்குரிய இடங்களில், இன்று காலை 5 மணி முதல் இந்த சோதனைகள் தொடங்கப்பட்டன.

சங்கூர் பாபா என அழைக்கப்படும் ஜலாலுதீன், ஆரம்பத்தில் தர்கா அருகே வளையல் மற்றும் தாயத்து விற்பனை செய்து வந்தார். பின்னர் மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதற்காக வெளிநாடுகளில் இருந்து ரூ.500 கோடிக்கும் மேல் நிதி திரட்டப்பட்டதன் தகவலும் வெளிவந்துள்ளது. இந்த விவகாரம் தற்போது மதமாற்றத்திலிருந்து பயங்கரவாத நிதியுதவி மற்றும் மோசடிகள் வரை விரிவடைந்துள்ளது.
சோதனைகள் நடைபெறும் இடங்களில் உத்தரபிரதேசத்தில் 12 இடங்களும், மும்பையில் பந்த்ரா மற்றும் மஹிம் ஆகிய பகுதிகளும் அடங்கும். அதிகாரிகள் இது தொடர்பாக பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பல்வேறு வங்கிக் கணக்குகள், சொத்துகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் குறித்தும் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மதமாற்றம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நவீன் என்பவரின் வங்கிக் கணக்கிலிருந்து ஷெஹ்சாத் ஷேக் என்ற நபருக்கு 2 கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும், இது சட்டவிரோத நிதி பரிமாற்றமாக இருப்பதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. இந்த வழக்கு நாட்டின் பல பகுதிகளில் அதிர்வலை ஏற்படுத்தி, சட்ட மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்புகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.