
சூரியனை ஆய்வு செய்வதற்கான இரட்டை செயற்கைக்கோள் புரோபா-3 இன்று பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) ஒரு அங்கமான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் மூலம் வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் வணிக ரீதியாக ஏவப்படுகின்றன.
இந்நிலையில், சூரியனை ஆய்வு செய்வதற்காக புரோபா-3 என்ற இரட்டை செயற்கைக்கோள் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தால் (ESA) வடிவமைக்கப்பட்டது. பிஎஸ்எல்வி ராக்கெட்டைப் பயன்படுத்தி இந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் நிறுவனம் இஎஸ்ஏ நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

அதன்படி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலம் புரோபா-3 செயற்கைக்கோள் இன்று (டிசம்பர் 4) மாலை 4.08 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. ராக்கெட் ஏவுவதற்கான 25 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று மாலை 3.08 மணிக்கு தொடங்கியது. எரிபொருள் நிரப்புதல் உள்ளிட்ட இறுதிக்கட்ட பணிகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
புரோபா-3 இரட்டை செயற்கைக்கோள்கள் பூமியில் இருந்து 60,500 கிமீ தொலைவிலுள்ள சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும். அங்கிருந்து 150 மீட்டர் தொலைவில் இரண்டு செயற்கைக்கோள்களும் அருகருகே பயணித்து சூரியனின் வெளிப் பகுதியை ஆய்வு செய்து தரவுகளை அனுப்பும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.