புதுடில்லி: புனித ஹஜ் யாத்திரையில் தனியார் பயண ஏற்பாட்டாளர்களின் வாயிலாக செல்லும் 10,000 இந்திய யாத்ரீகர்களுக்காக, முன்பதிவு இணையதளத்தை மீண்டும் திறக்க சவுதி அரசு ஒப்புக் கொண்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
முஸ்லிம்களுக்கான முக்கிய ஆன்மிக கடமையாகக் கருதப்படும் ஹஜ் யாத்திரை, இந்தாண்டு ஜூன் 4 முதல் 9 வரை நடைபெற உள்ளது. இந்தியாவிலிருந்து சுமார் 1.75 லட்சம் முஸ்லிம்கள் இந்தப் புனித பயணத்தை மேற்கொள்ள உள்ளனர். இவர்களில் 70 சதவீதம் பேர் மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள ஹஜ் கமிட்டி வழியாக பயணம் செய்கிறார்கள். மீதமுள்ள 30 சதவீதம் பேர் தனியார் ஹஜ் பயண ஏற்பாட்டாளர்களின் மூலம் பயணிக்கிறார்கள்.

இந்நிலையில், மினா பள்ளத்தாக்கில் இந்திய தனியார் ஹஜ் சர்வீச்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த தங்குமிட மண்டலங்களை சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் ரத்து செய்தது. காரணம், முன்பதிவுக்கு அறிவிக்கப்பட்ட நேரத்திற்குள் அந்த இடங்களை தனியார் பயண நிறுவனங்கள் பதிவு செய்யத் தவறியது. இதனால் அந்த இடங்கள் பிற நாடுகளுக்கு மாற்றப்பட்டன.
இதனால் 52,000 ஹஜ் யாத்ரீகர்களுக்கு தங்குமிடம் உறுதி செய்யப்படாத நிலை உருவானது. இது அவர்களின் ஹஜ் யாத்திரையை சந்தேகத்துக்குள்ளாக்கியது. இந்த சிக்கலைத் தீர்க்க மத்திய அரசு நேரடியாக தலையிட்டு சவுதி அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
அந்த முயற்சியின் பலனாக, இந்திய தனியார் பயண நிறுவனங்கள் 10,000 இடங்களை மீண்டும் முன்பதிவு செய்யக்கூடிய வகையில் ஹஜ் யாத்திரை இணையதளத்தை மீண்டும் திறக்க சவுதி அரசு சம்மதித்துள்ளது. மேலும், இந்த முறை எந்தவித காலதாமதமும் இல்லாமல், குறிப்பிட்ட நேரத்துக்குள் முன்பதிவை முடிக்குமாறு மத்திய அரசு தனியார் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.