சென்னை: புதிய தொழில் முனைவோருக்கு மாதந்தோறும் ரூ.25,000 உதவித் தொகை வழங்கும் திட்டத்தை கர்நாடக அரசு அறிமுகப்படுத்த உள்ளது என பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார்.
இந்த புதிய திட்டம் ஸ்டார்ட்அப்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. இதுபற்றி கர்நாடக ஐடி அமைச்சர் பிரியங்க் கார்கே பேசுகையில், “புதிய தொழில் தொடங்குவது ஆபத்தான முயற்சி. நிலையான வேலையை விட்டுவிட்டு புதிய முயற்சியைத் தொடங்குவது மிகவும் ஆபத்தானது. திறமையானவர்கள் பலர் பணப் பற்றாக்குறையால் தொழில் தொடங்கத் தயங்குகின்றனர்.
எனவே, வேலையை விட்டுவிட்டு புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கி நிதிச்சுமையை ஓரளவு குறைக்கும் நோக்கில் இத்திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம். அதன்படி, ஓராண்டுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் உதவித் தொகை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
அரசின் மானியம் புதிய தொழில் முனைவோர் தங்கள் அன்றாடச் செலவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் தங்கள் தொழிலில் கவனம் செலுத்த உதவும். தகுதியின் அடிப்படையில் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும்,” என்றார்.