திருவனந்தபுரம்: மூத்த குடிமக்களை பாதுகாக்கவும், அவர்களின் உரிமைகளை உறுதிசெய்யவும் கேரள அரசு நாட்டிலேயே முதல்முறையாக மூத்த குடிமக்கள் கமிஷன் ஒன்றை அமைத்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட கேரள மூத்த குடிமக்கள் கமிஷன் சட்டம் அடிப்படையில் இந்த கமிஷன் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கமிஷனின் தலைவராக சோம பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அமரவில்லா ராமகிருஷ்ணன், ஈ.எம். ராதா, கே.என்.கே. நம்பூதிரி மற்றும் லோபஸ் மேத்யூ ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை உயர்கல்வி மற்றும் சமூகநீதித் துறை அமைச்சர் பிந்து நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
முதியவர்கள் எதிர்கொள்ளும் குடும்ப புறக்கணிப்பு, சொத்து சுரண்டல், ஆதரவற்ற நிலையில் கைவிடப்படுதல் உள்ளிட்ட பிரச்சினைகளை கமிஷன் விசாரித்து தீர்வு காணும். அதோடு, முதியோரின் நலன் மற்றும் மறுவாழ்வு திட்டங்களுக்கு வழிகாட்டியாகவும் இந்த அமைப்பு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு, பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தைச் சேர்த்து பல மாநிலங்கள், கேரளா எடுத்துள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியை பின்பற்றக்கூடும் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.