புதுடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் 25-வது ஆளுநராக 2018 டிசம்பரில் நியமிக்கப்பட்ட சக்திகாந்த தாஸ், அந்த பதவியில் இருந்து டிசம்பர் 10, 2024 அன்று ஓய்வு பெற்றார். இந்நிலையில், பிரதமரின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடியின் பதவிக்காலம் முடியும் வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை அவர் அந்தப் பதவியில் நீடிப்பார். பி.கே. மிஸ்ரா பிரதமரின் முதன்மை செயலாளராக பணியாற்றி வருகிறார். தற்போது 2-வது முதன்மை செயலாளராக சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை, அமைச்சரவை நியமனக் குழு செயலர் மனிஷா சக்சேனா பிறப்பித்துள்ளார். சக்திகாந்த தாஸ் பிப்ரவரி 26, 1957 அன்று ஒடிசாவின் தலைநகரான புவனேஸ்வரில் பிறந்தார். 1980-ல் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்ட இவர், தமிழக அரசு பணியில் சேர்ந்தார். காஞ்சிபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட கலெக்டராகவும், பல்வேறு துறைகளில் செயலராகவும் பணியாற்றியவர். பின்னர், மத்திய அரசிடம் சென்று உரம், வருவாய், பொருளாதார விவகாரங்கள், நிதி ஆயோக் ஆகிய துறைகளில் பணியாற்றினார்.
பிரிக்ஸ், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, புதிய வளர்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் சார்க் ஆகியவற்றில் இந்தியாவின் பிரதிநிதியாக பணியாற்றினார். மத்திய அரசின் 8 பட்ஜெட்களைத் தயாரிப்பதில் முக்கியப் பங்காற்றினார். ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தபோது, சூழ்நிலைக்கு ஏற்ப ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்தார். பொருளாதாரம் மேம்பட வேண்டிய சமயங்களில் வட்டி விகிதத்தைக் குறைத்தார்.
அதே நேரத்தில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தினார். அவர் யெஸ் வங்கி மற்றும் லட்சுமி விலாஸ் வங்கியின் திவால் நிலையை தடுத்து அவர்களை மீட்டார். கொரோனா தொற்றுநோய்களின் போது, உலகம் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டபோதும் இந்தியாவின் பொருளாதாரம் நிலையானதாக இருப்பதை உறுதி செய்தார். ரஷ்யா-உக்ரைன் போரிலும், இஸ்ரேல்-ஹமாஸ் போரிலும் இந்தியப் பொருளாதாரம் வலுவாக இருக்க, சூழ்நிலைக்கு ஏற்ப முடிவுகளை எடுத்தார். சக்திகாந்த தாஸ், 2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளில், அமெரிக்க வணிக இதழான குளோபல் ஃபைனான்ஸ் வழங்கும் உலகின் சிறந்த வங்கியாளர் விருதை இரண்டு முறை பெற்றுள்ளார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, ரூபாய் மதிப்பு உயர்வு மற்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.