மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது X சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பனிக்கட்டிகள் உடைந்ததில் உறைந்து கிடக்கும் ஏரியில் நடந்து சென்ற 2 பெண்கள் உள்பட 4 பேர் கடும் போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டனர். அதில், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது:- அருணாச்சல பிரதேசத்தின் சேலா பாஸ் பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு எனது எச்சரிக்கை.
அங்குள்ள உறைந்த ஏரிகளில் செல்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அனுபவம் வாய்ந்தவர்களுடன் உறைந்த ஏரிகளில் கவனமாக நடக்கவும். அதேபோல், பனி படர்ந்த சாலைகளில் வாகனம் ஓட்டும்போது கவனமாக வாகனத்தை ஓட்டவும். இங்கு மிகவும் குளிராக இருக்கிறது. எனவே, குளிருக்கு வசதியான ஆடைகளை அணிந்து, வானிலையை அனுபவிக்கவும்.
அதே நேரத்தில், உங்கள் பாதுகாப்பும் முக்கியமானது. இவ்வாறு அவர் கூறினார். இந்த அதிர்ச்சி வீடியோவை பார்த்த மற்ற சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சமூக வலைதளங்களில் ஒருவர் கூறுகையில், “சுற்றுலா பயணிகள் சாகசத்திற்காக உறைந்த ஏரி பகுதிக்கு செல்ல நினைக்கின்றனர். தங்களுக்கு சவால் விடும் வகையில் அப்பகுதியில் போட்டியிடுகின்றனர்.
கடந்த ஆண்டு, நாங்கள் சென்ற பனிப் பகுதியில் சில சுற்றுலாப் பயணிகள் சிக்கிக் கொண்டனர். அருணாச்சலப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் உள்ள ஏரிகள் குளிர்காலத்தில் உறைந்து, சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி அவற்றில் சிக்கிக் கொள்வது குறிப்பிடத்தக்கது.