
பெங்களூரு: நிலமோசடி வழக்கில் சித்தராமையா பெயர் சிக்கியுள்ளதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மாநில எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோகா வலியுறுத்தி வருகிறார். முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்த நிலம் கையகப்படுத்த மைசூர் நகர்ப்புற வளர்ச்சிக் கழகம் மாற்று நிலம் ஒதுக்கியது.
இதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரையடுத்து லோக்ஆயுக்தா போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மூத்த மைத்துனர் மல்லிகார்ஜுன சுவாமி, இளைய மைத்துனர் தேவராஜ் ஆகியோரிடம் லோக் ஆயுக்தா போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையில், 4 பேர் மீதும் அமலாக்க இயக்குனரகம் வழக்குப் பதிவு செய்துள்ளது.

மைசூருவில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சித்தராமையா, நிலம் ஒதுக்கீடு விவகாரத்தில் எனக்கு தொடர்பு இல்லை, நான் எந்த விதிகளையும் மீறவில்லை, இந்த வழக்கில் நிரபராதி என்று வெளியே வருவேன். ஆனால் அரசியல் பழிவாங்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசியல் உள்நோக்கத்துடன் என் மீது அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அமலாக்க இயக்குனரகத்தின் செயல்பாடு குறித்து எனக்கு சந்தேகம் உள்ளது. குறிப்பாக, என் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தேன். இந்த மனு விசாரணைக்கு முந்தைய நாள் அமலாக்க இயக்குனரகம் எனக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதன் மூலம் கர்நாடக உயர்நீதிமன்றம் மூலம் மறைமுகமாக அழுத்தம் கொடுக்க அமலாக்க இயக்குனரகம் முயற்சிப்பது அம்பலமாகியுள்ளது. இந்த சதிகளை எதிர்கொண்டு வழக்கில் இருந்து என்னை வெற்றிகரமாக விடுவித்துக் கொள்வேன்.