ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மொபைல் சிம்கார்டு விற்பனையாளர்கள் போலி பெயர்களில் சிம்கார்டுகளை விற்பது, ஒருவரின் அடையாள ஆவணங்களை பயன்படுத்தி மற்றொருவருக்கு சிம்கார்டுகளை விற்பது போன்ற மோசடிகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், ஸ்ரீநகர், அனந்த்நாக், புல்வாமா, பட்காம், சோபியான், பந்திபோரா, சம்பா, கிஷ்த்வார் உள்ளிட்ட மாவட்டங்களில் போலீஸார் சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பயங்கரவாதிகளுக்கு சிம்கார்டு வழங்கியது தொடர்பாக ஒரு வாரத்தில் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல், ஜம்மு காஷ்மீரின் சில சிறைகளில் உள்ள கைதிகளிடம் இருந்து சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் சிம்கார்டுகளை சரிபார்க்கும் பணியை போலீசார் தொடங்கியுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் சிம்கார்டு விற்பனையில் அதிகரித்து வரும் மோசடி மற்றும் சட்டவிரோத செயல்களை தடுக்க சிம்கார்டு சரிபார்ப்பு நடந்து வருகிறது. அனந்த்நாக், புத்காம் மற்றும் புல்வாமா மாவட்டங்களில் தற்போது நடைபெற்று வரும் சிம்கார்டு சரிபார்ப்பு நடவடிக்கை மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்” என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.