ஹைதராபாத்தில் தெலுங்கானா போதைப்பொருள் தடுப்பு பிரிவின் சிறப்பு படை நடத்திய சுற்றிவளைப்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இதில், முக்கிய கேளிக்கை விடுதிகளில் போதைப்பொருள்கள் விற்பனை செய்யப்படும் தகவலின் அடிப்படையில் சோதனைகள் நடத்தப்பட்டன. சம்பந்தப்பட்ட குழு ஹீல்ஸ் செருப்புகளை பயன்படுத்தி கோகைன் மற்றும் பிற போதைப்பொருள்களை கடத்தி வந்தது.
முக்கிய சந்தேகநபராக எம்.பி.ஏ. பட்டதாரி சூர்யா அன்னமானேனி அடையாளம் காணப்பட்டார். இவர் கொம்பள்ளி பகுதியில் வசித்து வருகிறார். தொடர்ந்து பின்தொடர்ந்த அதிகாரிகள், அவர் “மல்நாடு கிச்சன்” என்ற உணவகத்தை இயக்குவதை கண்டறிந்தனர். இந்த உணவகத்தில் போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாகவும் தெரியவந்தது.
அவரது காரில் நடத்தப்பட்ட சோதனையில் கோகைன், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. காரில் இருந்த பெண் ஒருவரின் ஹீல்ஸ் செருப்புகள் சோதனைக்குட்படுத்தப்பட்டபோது, அதன் உள்ளே கோகைன் மறைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் சூர்யா உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பிரபல தொழிலதிபர்களுக்கும், கேளிக்கை விடுதி உரிமையாளர்களுக்கும் போதைப்பொருள் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் ஹைதராபாத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.