துமகுரு: நாட்டு துப்பாக்கிகளை சட்டவிரோதமாக தயாரித்து விற்பனை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். துமகுரு குப்பி திப்பூர் கிராமத்தைச் சேர்ந்த மது சந்திரா, சிவக்குமார் ஆகிய இருவர், கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி இரவு, 10:30 மணியளவில், துப்பாக்கியுடன் வனப்பகுதியில் வேட்டையாட சென்றனர்.
இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த தர்ஷன், “காட்டில், வேட்டையாட வேண்டாம்.” அப்போது ஏற்பட்ட கைகலப்பில் துப்பாக்கி தவறி கீழே விழுந்து வெடித்தது. இதில் தர்ஷனின் மனைவி படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக குப்பி போலீசார் சிவக்குமார், மது சந்திராவிடம் விசாரித்தபோது, அவர்கள் சட்டவிரோதமாக துப்பாக்கி தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது.
துப்பாக்கி தயாரிப்பு கும்பலை கைது செய்ய துமகுரு எஸ்பி அசோக் தனிப்படை அமைத்தார். இக்குழுவினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி, மதுசந்திரா, 24, மது சந்திரா, 29, மஞ்சுநாத், 39, திம்மராஜு, 45, ரவீஷ், 50, இம்ரான் பாஷா, 40, ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து துப்பாக்கியின் உதிரி பாகங்கள் மற்றும் துப்பாக்கி தயாரிக்க பயன்படுத்திய உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திம்மராஜு, ரவீஷ் ஆகியோர் சட்டவிரோதமாக துப்பாக்கியை தயாரித்துள்ளனர். லேத் மற்றும் டிரில்லிங் மிஷினைப் பயன்படுத்தி இதற்குத் தேவையான எந்திர வேலைகளை இம்ரான் செய்திருந்தார். அவர்களிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கியை வாங்கியவர்கள் வன விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்தது.