குஜராத்தின் சவுராஷ்டிரா பிராந்தியத்தில் அமைந்துள்ள நுாற்றாண்டு பழமையான சோம்நாத் சிவன் கோவிலில், சிவராத்திரியை முன்னிட்டு மஹோத்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 12 ஜோதிர்லிங்க தலங்களில் முதலாவதாக போற்றப்படும் இந்த கோவிலில், மூன்று நாள் மஹோத்சவம் நிகழ்ச்சி நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நிகழ்வை மாநில முதல்வர் பூபேந்திர படேல் நேற்று முன்தினம் மாலை துவக்கி வைத்தார். நாளை வரை நடைபெறும் இந்த விழாவில் பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டு தரிசனம் செய்ய உள்ளனர்.
முதல்வர் தனது உரையில், “சோம்நாத் மஹோத்சவம் நடக்கும் இடம் வெறும் மதத்தை குறிக்கும் தளம் மட்டுமல்ல, இது மன உறுதி, கலாசாரம் மற்றும் இந்திய அடையாளத்தின் சின்னமாக விளங்குகிறது” என்று கூறினார்.
இந்த விழாவை முன்னிட்டு மூன்று நாட்களும் பிரசித்தி பெற்ற இசை மற்றும் நடன கலைஞர்களின் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பக்தர்களின் வசதிக்காக கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.