புதுடில்லி: உத்தரபிரதேச மாநிலத்தின் சோன்பத்ராவில் அமைந்துள்ள 140 கோடி ஆண்டுகள் பழமையான சல்கான் புதைபடிவ பூங்கா, யுனெஸ்கோவின் தற்காலிக உலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

சோன்பத்ரா மாவட்டம் ரோபர்ட்சுகஞ்சிலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ள சல்கான் கிராமத்திற்கு அருகே அமைந்துள்ள இந்த பூங்கா, ஸ்ட்ரோமாடோலைட்டுகள் என அழைக்கப்படும் அரியவகை புதைபடிவங்களை உள்ளடக்கியது. இந்தப் பூங்கா, பூமியின் ஆரம்பகால உயிரினங்களின் சான்றுகளை தாங்கி நிற்கும் முக்கிய புவியியல் தளமாகக் கருதப்படுகிறது.
தற்காலிக பட்டியலில் சேர்க்கப்படுவது, யுனெஸ்கோவின் நிரந்தர பட்டியலில் சேரும் முன் கடக்கும் முக்கிய கட்டமாகும். இது சர்வதேச அங்கீகாரத்தையும், உ.பி. மாநிலத்தில் சுற்றுலா வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தலைமையில் இப்பூங்காவுக்கான நிரந்தர அந்தஸ்தைப் பெறும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த அங்கீகாரம், இந்தியாவின் இயற்கை மற்றும் புவியியல் பாரம்பரியத்தை உலகத்துடன் பகிரும் ஒரு முக்கிய முன்னேற்றமாகும்.