அமராவதி: நாட்டில் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ள ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண், இந்த சூழலில் ராணுவத்தைவிட மாநில போலீசாரே அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென் மாநிலங்கள் தீவிரவாதிகளுக்கு மென்மையான இலக்குகளாக மாறியுள்ளதாக கூறியுள்ளார்.

ஹைதராபாத் மற்றும் கோவையில் கடந்த காலங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளை எடுத்துக்காட்டிய பவன் கல்யாண், சமீபத்தில் ஹைதராபாத்தில் வெடிகுண்டு வெடிக்கத் திட்டமிட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டதையும் குறிப்பிட்டார். இந்நிலையில் மாநில காவல்துறை கட்டுப்பாடுகளை வலுப்படுத்தி, கடற்கரை பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த மாதம் காஷ்மீரில் நடைபெற்ற பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக நடத்தப்பட்ட “ஆபரேஷன் சிந்தூர்” மூலம் சில தீவிரவாதிகள் அழிக்கப்பட்டனர். ஆனால் அந்த நடவடிக்கையை தொடர்ந்து பல இடங்களில் தொடர்ந்து அச்சுறுத்தல் நிலவுவதாகவும் பவன் கல்யாண் தெரிவித்தார்.
இது தொடர்பாக டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், மாநில காவல்துறையும், அரசு அதிகாரிகளும் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். புலம்பெயர்ந்தவர்களை கண்காணிக்க வேண்டும் என்றும், கடலோர பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் கூறினார்.
கடந்த காலங்களில் காக்கிநாடாவில் படகுகள் மூலம் சிலர் நுழைந்ததாக தகவல் வந்ததாகவும், இவற்றையும் முக்கியமாக எடுத்துக்கொண்டு முன்கூட்டியே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பவன் கல்யாண் வலியுறுத்தினார்.
ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் குறித்தும் அவர் கருத்து வெளியிட்டார். 2017–18ல் தங்க நகை தொழில் மூலமாக ஆந்திராவில் அதிகமான ரோஹிங்கியாக்கள் குடியேறியதாகவும், அவர்கள் ஆதார், வாக்காளர் அட்டை, ரேஷன் கார்டு போன்ற ஆவணங்களை சட்டவிரோதமாக பெற்றுக்கொண்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இது உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறைவடைய காரணமாக இருக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.
இதுபோன்ற ஆவணங்கள் அவர்கள் எவ்வாறு பெற்றார்கள் என்பதைப் பற்றி தனித்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இனிமேலும் இத்தகைய அலட்சியம் நிகழக்கூடாது என்றும் அவர் எச்சரித்தார். பாதுகாப்பு மீதான அக்கறையை அரசும், காவல்துறையும் அதிகரிக்க வேண்டிய நேரமிது என பவன் கல்யாண் வலியுறுத்தியுள்ளார்.