கேரளா: 8 நாட்களுக்கு முன்பே தொடங்கியது… கேரளாவில் 8 நாட்களுக்கு முன்பாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கியது
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 1-ந்தேதி தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு 8 நாட்களுக்கு முன்னதாக இன்று தொடங்கி உள்ளது.
தமிழகத்திலும் முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது. பருவமழை தொடங்கப்போகும் அறிகுறியாக கடந்த ஒரு வார காலமாகவே கேரள மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. வயநாடு, கோழிக்கோடு, காசர்கோடு உள்ளிட்ட வட மாவட்டங்களில் மட்டும் பலத்த மழை பெய்தது.
அதன்படி நேற்று பல மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. முக்கியமாக திருவனந்தபுரத்தில் கடும் காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பலத்த காற்று காரணமாக பல இடங்களில மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. மேலும் 40-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரிக்கு முன்பு இருந்த மரம் விழுந்ததில் ஒருவர் காயமடைந்தார்.
நெய்யாற்றின்கரை மற்றும் கட்டக்கடா தாலுகாவில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்தன. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பல இடங்களில் மின்கம்பங்களும் விழுந்ததால் மணிக்கணக்கில் மின்சார வினியோகம் தடைபட்டது.
கண்ணூரில் பலத்தமழை காரணமாக அங்குள்ள ஒரு கல்குவாரியில் நிலச்சரிவு ஏற்பட்டதில் புலம்பெயர் தொழிலாளி ஒருவர் பலியானார். அங்கிருந்த டிரைவர் ஒருவர் படுகாயமடைந்தார். இதையடுத்து நிலச்சரிவு ஏற்பட்ட கல்குவாரி மூடப்பட்டது. மேலும் பல கல்குவாரிகளின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.