புதுடில்லி: அசாமில் சிறப்பு திருத்தம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவு இட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து அடுத்த வருடம் தேர்தல் நடைபெற இருக்கும் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா உள்பட 12 மாநிலங்களில் SIR மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
ஒரு மாதத்திற்குள் வாக்காளர்கள் SIR படிவங்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டிய நிலை உள்ளது. இதற்கு பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதேவேளையில் அடுத்த வருடம் தேர்தல் நடைபெற இருக்கும் அசாம் மாநிலத்தில் ஏன் SIR பணி மேற்கொள்ள உத்தரவிடவில்லை என்று எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த நிலையில் அசாம் மாநிலத்தில் சிறப்பு திருத்தம் (Special Revision) மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வீடு வீடாக சென்று நவம்பர் 22-ந்தேதி முதல் டிசம்பர் 20-ந்தேதி வரை வாக்காளர்கள் பெயர் சரிபார்க்கப்படும். டிசம்பர் 27-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 10-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளது.