சென்னையில் வசிக்கும் வெளியூரை சேர்ந்த மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. நாளை சனிக்கிழமை சென்னையில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த ரயில் இரவு 11.30 மணிக்கு எழும்பூரிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7.55 மணிக்கு மதுரையை எட்டும். அதேபோல மீண்டும் மதுரையில் இருந்து தாம்பரத்திற்கு மே 12ஆம் தேதி திங்கட்கிழமை இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை 7.50 மணிக்கு வந்து சேரும்.பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனால் பொதுப்போக்குவரத்திலும் தனியார் பேருந்துகளிலும் பயணச்சுமை பெருகியுள்ளது. குறிப்பாக, சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் பேருந்துகளில் கட்டணம் பெரிதும் உயர்ந்துள்ளது. சில ஏசி சீட்டர் பேருந்துகளின் கட்டணம் ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது.இந்நிலையில், ரயில்களில் முன்பதிவு முன்பே நிறைவடைந்து விட்டதால், கடைசி நேர பயணிகள் டிக்கெட் பெற முடியாமல் தவிக்கின்றனர். தட்கல் டிக்கெட்டுகளும் விரைவில் நிரம்பி விடுகின்றன.
இதனால் குடும்பத்துடன் ஊருக்குச் செல்லும் திட்டத்தை பலர் ஒத்திவைத்து வருகின்றனர்.பயணிகளின் கோரிக்கையை ஏற்று தெற்கு ரயில்வே இந்த சிறப்பு ரயில்களை இயக்குகிறது. இந்த ரயில் செங்கல்பட்டு, மேல் மருவத்தூர், திண்டிவணம், விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல் கொடை ரோடு வழியாக மதுரைக்கு செல்லும். திருச்சியில் 10 நிமிடங்கள் மற்றும் திண்டுக்கலில் 5 நிமிடங்கள் நின்று செல்லும்.
இந்த ரயிலில் இரண்டு ஏசி கோச்கள், 16 ஸ்லீப்பர் கோச்கள் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இருக்கின்றன. முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. இந்த அறிவிப்பால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இந்த சிறப்பு ரயில்கள் தொடர்ச்சியாக இயக்கப்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.