ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர், உலக கைவினைப் பொருட்கள் சங்கத்தால், ‘உலக கைவினை நகரம்’ என அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உலக கைவினை சங்கத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது:
இது ஸ்ரீநகரின் செழுமையான பாரம்பரியத்திற்கு கிடைத்த அங்கீகாரமாகும். இங்குள்ள கைவினைஞர்களின் கலைத்திறனும் அர்ப்பணிப்பும் உலகளாவிய பாராட்டைப் பெற்றுள்ளது. ‘உலக கைவினைப் பொருட்கள் நகரம்’ என்ற அங்கீகாரம், கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் துறையை மேலும் சீராகவும், நிலையானதாகவும் வளர ஊக்குவிக்கும், மேலும் புதுமைகளை ஊக்குவிக்கும். இத்துறையில் அதிக சர்வதேச முதலீடுகளை ஈர்க்கவும், புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கவும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் இது உதவும்.
முக்கியமாக பாரம்பரிய முறைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில் நவீன நுட்பங்களையும் அறிமுகப்படுத்துகிறது. ஸ்ரீநகரின் தனித்துவமான கைவினைப் பொருட்களுக்கான தேவை அதிகரித்து, உற்பத்தியும் அதிகரிக்கும். இது புதிய வேலைகளை உருவாக்கும். இது கைவினைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும். ஸ்ரீநகரின் சுற்றுலாத் துறையும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காணும். அவர் கூறியது இதுதான். ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறியதாவது: இந்த அங்கீகாரம் கைவினைஞர்களின் கடின உழைப்பு மற்றும் அபார திறமைக்கு சான்றாகும்.
எங்கள் கைவினைஞர்களை நாங்கள் முழு மனதுடன் ஆதரிக்கிறோம். இந்த பாராட்டு கைவினைஞர்களின் சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் மாற்றப்படும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். ஜம்மு காஷ்மீரின் கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறித் துறைக்கு பிரதமர் நரேந்திர மோடி சமரசமின்றி உறுதுணையாக இருந்து வருகிறார். அவர் கூறியது இதுதான்.