புதுடெல்லி: டெல்லியின் சத்தர்பூரில் தென்கிழக்கு ஆசிய பல்கலைக்கழகம் (SAU) உள்ளது. சார்க் நாடுகள் கூட்டாக உருவாக்கி நடத்தும் இந்த சர்வதேச பல்கலைக்கழகம், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கிறது. இந்திய மாணவர்களும் இங்கு படிக்கின்றனர்.
இந்தப் பல்கலைக்கழகத்தில் நடக்கும் தவறுகளுக்கு எதிராக சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில், ஞாயிற்றுக்கிழமை இரவு அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட SAU வளாகத்தில் 4 பேர் கொண்ட கும்பலால் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார் வந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மைதான் கடி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், பல்கலைக்கழக நிர்வாகம் பேராசிரியர் சஞ்சய் சதுர்வேதி தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. அடுத்த 10 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குழு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக் கோரி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் டெல்லி போலீசார் சமாதானப்படுத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். போராட்டத்தின் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.