புதுடில்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) கால் வைத்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்ற குரூப் கேப்டன் சுபான்ஷூ சுக்லா இன்று மாலை இந்தியா திரும்புகிறார்.
சமீபத்தில் நடைபெற்ற விண்வெளி பயணத்தில், சுக்லா உட்பட நான்கு வீரர்கள் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பினர். இதன் மூலம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் அவர் ஒரு முக்கியமான மைல்கல் பதித்துள்ளார்.

இந்தியா வருகை தரும் சுக்லா, டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசுவார். அதன் பின்னர் தனது சொந்த ஊரான லக்னோவுக்கு சென்று குடும்பத்தினருடன் சில நாட்கள் தங்குவார்.
மேலும், அவர் ஆகஸ்ட் 23 அன்று டில்லியில் நடைபெறும் தேசிய விண்வெளி நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க உள்ளார். அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு புறப்படுவதற்கு முன், சமூக வலைதளத்தில் சுக்லா பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதில் அவர்,
“இந்தியாவுக்குத் திரும்பும் விமானத்தில் அமர்ந்திருக்கும் இந்த தருணம் என் வாழ்க்கையில் மறக்க முடியாதது. விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு, என் குடும்பம், நண்பர்கள் மற்றும் நாட்டின் மக்களை சந்திக்கப் போகும் உணர்ச்சி மிகுந்த உற்சாகத்தை தருகிறது. நாம் அனைவரும் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும். விண்வெளியில் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம் – ஒரே நிலையானது மாற்றமே. அது வாழ்க்கைக்கும் பொருந்தும்,” என்று குறிப்பிட்டார்.
இந்த வரலாற்றுப் பயணத்துடன், சுபான்ஷூ சுக்லா இந்தியாவின் விண்வெளி சாதனைகளில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார்.