புதுடில்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் உணவு சாப்பிடும் அனுபவத்தை இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா வீடியோவாக வெளியிட்டுள்ளார். விண்வெளியில் உணவு சாப்பிட கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். சில மணி நேரங்களிலேயே அது வைரலாகி, ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் காலடி பதித்த முதல் இந்தியராகவும், விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியராகவும் சுபான்ஷூ சுக்லா வரலாறு படைத்துள்ளார். தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்ட அவர், விண்வெளியில் சாப்பிடும் போது சிறிய பழக்கவழக்கங்களின் முக்கியத்துவத்தை விளக்கினார். “சாப்பிடும்போது கவனக்குறைவாக இருந்தால் சிரமங்கள் ஏற்படலாம், அதனால் பொறுமை மிகவும் அவசியம்” என அவர் குறிப்பிட்டார்.
சுக்லா தனது பதிவில், “விண்வெளியில் உணவு சாப்பிடுவது எளிதான விஷயம் அல்ல. நிலத்தில் நாம் சாதாரணமாகச் செய்வதை அங்கு கவனமாக கற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதுவே எனக்கு மிகப்பெரிய பாடமாக அமைந்தது” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் விண்வெளியில் பணியாற்றும் ஒவ்வொரு விஷயத்துக்கும் சிறப்பான ஒழுங்கும் பொறுமையும் தேவை என்பதை வலியுறுத்தினார்.
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து வெளியான இந்த வீடியோ, இந்திய விண்வெளி வரலாற்றில் புதிய பக்கத்தை எழுதியுள்ளது. சுபான்ஷூ சுக்லாவின் அனுபவங்கள், எதிர்கால இந்திய விண்வெளி வீரர்களுக்கு ஊக்கமாக இருக்கும் வகையில் உள்ளது. அவரது சாதனை, நாடு முழுவதும் பெருமையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.